அனைத்துப் புகழும் அகில உலகையும் படைத்தது பரி பக்குவப்படுத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே உரித்தாகுக -

Friday, 23 May 2014

மண்ணறை விசாரணை!

னிதன் இன்று வாழ்கின்ற வாழ்க்கை எவ்வளவு உண்மையானதோ அதைப் போன்றே மனிதன் மரணித்த பின்னர் சந்திக்கும் மண்ணறை விசாரணையும் நிதர்சனமான உண்மையாகும் என இஸ்லாம் ஆணித்தரமாக அறிவித்துள்ளது. மண்ணறை விசாரணை, மற்றும் விசாரணைக்குப் பிறகு மண்ணறையில் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நடந்தேறும் உண்மைச் சம்பவமாகும் என்பதில் முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்து இல்லை!
மறுமையின் முன்னோட்டமாக - மரணித்தவர் மறுமை நாளில் பெறப்படும் சுவர்க்கம் அல்லது நரகத்தைத் தீர்மானிக்கும் இடமாக மண்ணறை அமைந்துள்ளது. மனிதனின் உயிர் கைப்பற்றப்பட்டு, மரணித்தவுடன் நடக்கும் நிகழ்வுகளை குர்ஆன், சுன்னா விவரித்திருப்பதிலிருந்து மரணித்த ஆன்மாவின் வாழ்க்கை என்பது மனிதனின் புலன்களுக்கு எட்டாத் தனியொரு உலகம் என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக விளங்கலாம். ஆன்மாக்களின் மண்ணறை வாழ்க்கை மறைவானது என்றாலும் அவற்றை நம்பவேண்டும் என்பதே இஸ்லாம் மார்க்கத்தின் நிலைப்பாடு!

மரணித்தவரின் மண்ணறை வாழ்க்கையை, மரணிக்கவிருக்கும் மனிதன் சிறிதளவேனும் அறிந்து கொண்டால் அதுவே பெரும் படிப்பினையாகும். எனும் நோக்கில் மண்ணறை விசாரணைக் குறித்து அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அறிவித்த சில செய்திகள் இங்குத் தரப்படுகின்றன.
இறைவசனங்கள்:
நமது வசனங்களைப் பொய்யெனக் கொண்டு, அவற்றை விட்டும் பெருமையடிப்பவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டா. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சுவர்க்கத்தில் நுழையவும் மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளுக்கு நாம் கூலி வழங்குவோம் (அல்குர்ஆன் 7:40).

இறைநம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச் செய்வான். மேலும் அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுவான். அல்லாஹ், தான் நாடுவதைச் செய்வான் (அல்குர்ஆன் 14:27).
அல்லாஹ்வுக்கும் எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக வாழுங்கள்; இன்னும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர், வானத்திலிருந்து தரைவியில் விழுந்து, பறவைகள் அவரை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவார் (அல்குர்ஆன் 22:31).
திண்ணமாக, (கடுங்காவல் கைதிகளின் ஏடான) ஸிஜ்ஜீனில் தீயோர்களின் விதிப்பதிவு உள்ளது (அல்குர்ஆன் 83:7).

திண்ணமாக, (மேன்மக்களின் ஏடான) இல்லிய்யீனில் நல்லோர்தம் விதிப்பதிவு உள்ளது (அல்குர்குர் 83:18).
நபிமொழிகள்:
அன்ஸாரிகளில் ஒருவரின் (ஜனாஸா) இறுதிக் கடனை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் புறப்பட்டு, அடக்கத்தலத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். அங்குக் குழிதோண்டி முடிக்கப்படவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி, எங்களின் தலைகள் மீது பறவை இருந்ததைப் போன்று (அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி (ஸல்) அவர்களின் கையில் குச்சியொன்று இருந்தது. அதைக் கொண்டு அவர்கள் தரையில் குத்திக்கொண்டிருந்தார்கள்.

பின்னர், தமது தலையை உயர்த்தி,
"அடக்கத்தலத்தின் (கப்ரின்) வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்" என்று இரண்டு அல்லது மூன்று தடவை கூறிவிட்டுத் தொடர்ந்து கூறலானார்கள்:

"இறைநம்பிக்கை கொண்ட அடியார் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று, மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்கள் சிலர் வானத்திலிருந்து இறங்கி அவர்களிடம் வருவர். அவர்களின் முகங்கள் வெண்மையாக இருக்கும். அவை சூரியனைப் போன்று ஒளிரும். அவர்களுடன் சொர்க்கத்தின் கஃபன்
(பிரேத) ஆடைகளில் ஓர் ஆடையும் சொர்க்கத்தின் வாசனைத் திரவியங்களில் ஒன்றும் இருக்கும். இறுதியில், அவரது பார்வை எட்டும் தூரத்தில் அவர்கள் வந்து அமர்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். அவர், 'தூய்மையான உயிரே! அல்லாஹ்வின் மன்னிப்பையும் அன்பையும் நோக்கி நீ புறப்படுவாயாக' என்பார்.

அப்போது தண்ணீர்ப் பையின் வாயிலிருந்து நீர் வழிவதைப் போன்று
(அவரது உடலிலிருந்து) உயிர் வெளியேறும். உடனே அதை அந்த வானவர் எடுத்துக்கொள்வார். அவர் எடுத்ததும் கண்ணிமைக்கும் நேரம்கூட அந்த உயிரை அவரது கையில் மற்ற வானவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள். இறுதியில் அதை அவர்கள் வாங்கிக்கொண்டு (தாம் கொண்டு வந்த) பிரேதத் துணியில் வைத்து அந்த வாசனைத் திரவியத்தைப் பூசுவார்கள். பூமியின் மேற்பரப்பில் கிடைக்கும் கஸ்தூரியின் உயர்தரமான நறுமணத்தைப் போன்றதொரு நறுமணம் அதிலிருந்து வெளிவரும்.

பின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள். அவர்கள் அந்த உயிரை எடுத்துக்கொண்டு வானவர்களின் ஒரு கூட்டாத்தாரைக் கடந்து செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டத்தார், 'இந்தத் தூய உயிர் யாருடையது?' என்று கேட்பர். அதற்கு அவர்கள், 'இன்னாரின் மகன் இன்னார்' என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அழகான பெயரைக் குறிப்பிடுவார்கள். இறுதியில் அந்த உயிருடன் பூமியின்
(அருகிலிருக்கும் முதல்) வானத்தை வானவர்கள் அடைவார்கள்.

அவருக்காக அந்த வானத்தைத் திறக்கக் கோருவார்கள். அவருக்காக அது திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலிருக்கும் இறை நெருக்கம்பெற்ற வானவர்கள் அந்த வானத்திலிருந்து அடுத்த வானம்வரை அவரைப் பின் தொடர்ந்து செல்வார்கள். இறுதியில் அவர் ஏழாவது வானத்திற்குக் கொண்டு செல்லப்படுவார். அப்போது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், 'என் அடியானின்
(வினைப்) பதிவேட்டை (நல்லோர்களின் வினைகள் பதிவு செய்யப்பட்ட) இல்லிய்யூன் எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள். அவரை மறுபடியும் மண்ணுக்கே அனுப்புங்கள், ஏனெனில் அதிலிருந்தே அவர்களை(மனிதர்களை)ப் படைத்தேன்; அதற்கே அவர்களை நான் திருப்பி அனுப்புவேன். (பின்னர்) மற்றொரு முறை அதிலிருந்தே அவர்களை நான் வெளியாக்குவேன்' என்று கூறுவான்.

பின்னர் அவரது உயிர்
(மண்ணறையிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும். அவரிடம் இரண்டு வானவர்கள் வந்து அவரை (எழுப்பி) அமரவைப்பர். அவ்விருவரும் அவரிடம், 'உம்முடைய இறைவன் யார்?' என்று கேட்பர். அதற்கு, 'என் இறைவன் அல்லாஹ்' என்று அவர் பதிலளிப்பார். அடுத்து, 'உமது மார்க்கம் எது?' என்று அவ்விருவரும் அவரிடம் கேட்பர். 'எனது மார்க்கம் இஸ்லாம்' என்று அவர் கூறுவார்.

பிறகு 'உங்களிடையே அனுப்பப்பட்ட இன்னார் யார்?' என்று
(என்னைப் பற்றி) அவ்விருவரும் அவரிடம் கேட்பர். 'அவர் அல்லாஹ்வின் தூதர்' என்று அவர் பதிலளிப்பார். அவ்விருவரும் 'அது எப்படி உமக்குத் தெரியும்?' என்று அவரிடம் கேட்பார்கள். அதற்கு அவர், 'நான் அல்லாஹ்வின் வேதம் (குர்ஆனைப்) படித்தேன்; அதன் மீது நம்பிக்கை கொண்டேன்; உண்மையென ஏற்றேன்' என்று கூறுவார்.

உடனே வானிலிருந்து, 'என் அடியார் உண்மை உரைத்தார். எனவே அவருக்குச் சொர்க்கத்தி(ன் விரிப்புகளி)லிருந்து
(ஒரு விரிப்பை) விரித்துக் கொடுங்கள். சொர்க்க ஆடைகளில் ஒன்றை அணிவியுங்கள், அவருக்காகச் சொர்க்க வாசல் ஒன்றைத் திறந்துவிடுங்கள்' என்று அறிவிப்பு வரும். (அவ்வாறே ஏற்பாடுகள் செய்யப்படும்) அந்த வாசல் வழியாகச் சொர்க்கத்தின் நறுமணமும் வாசனையும் அவரிடம் வரும். பார்வை எட்டும் தூரம்வரை அவருக்கு அவரது அடக்கத்தலம் விரிவுபடுத்தப்படும். பின்னர் பொலிவான முகமும் அழகான ஆடையும் நல்ல நறுமணமும் கொண்ட ஒருவர் அவரிடம் வந்து, 'உமக்கு மகிழ்ச்சி தரும் நற்செய்தியொன்றை(ச் சொல்கிறேன்) கேளும்; இதுதான் உமக்கு வாக்களிக்கப்பட்ட நாள் ஆகும்' என்பார்.

அப்போது அவர், அந்த அழகானவரிடம் 'நீர் யார்? உமது முகம் நன்மையைக் கொண்டுவரும் முகமாக உள்ளதே' என்று கேட்பார். அதற்கு அந்த அழகர், 'நான்தான் நீர் செய்த நற்செயல்கள்' என்பார். உடனே அவர் 'என் இறைவா! யுக முடிவு
(நாளை இப்போதே) ஏற்படுத்துவாயாக; நான் என் குடும்பத்தாரிடமும் செல்வத்திடமும் மறுபடியும் போய்ச்சேர வேண்டும்' என்று கூறுவார்.
(ஏக இறைவனை) மறுதலித்த அடியார் ஒருவர் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்களில் சிலர் வானிலிருந்து இறங்கி அவரிடம் வருவர். அவர்களின் முகங்கள் கருப்பாக இருக்கும். அவர்களுடன் முடியாலான (முரட்டு கஃபன்) ஆடை ஒன்று இருக்கும். அவர்கள் அவரது பார்வை எட்டும் தூரத்தில் வந்து அமர்ந்துகொள்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். 'மாசடைந்த ஆன்மாவே! அல்லாஹ்வின் வெறுப்பையும் சினத்தையும் நோக்கிப் புறப்படு' என்பார். அப்போது அவரது உடல் தளர்த்தப்படும். பின்னர் ஈரக் கம்பளியில் சிக்கிக்கொண்ட முள்ளை இழுப்பதைப் போன்று அவரது உடலிலிருந்து உயிரைப் பிடித்து இழுத்துப் பறிப்பார்.

உயிரைப் பறிக்கும் வானவர் அந்த உயிரைக் கைப்பற்றியதும் கண்ணிமைக்கும் நேரம்கூட அதை அவரது கையில் அந்த வானவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள். உடனே அதை அவர்கள் பெற்று
(தாம் கொண்டு வந்திருக்கும்) முடியாலான அந்த (முரட்டுக் கஃபன்) ஆடையில் வைப்பார்கள். அப்போது ஒரு பிணத்தின்
மேற்பரப்பிலிருந்து வீசும் மிக மோசமான துர்வாடையைப் போன்று அதிலிருந்து துர்நாற்றம் வெளிவரும். பின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள். அவர்கள் அந்த உயிரை எடுத்துக்கொண்டு வானவர்களின் ஒரு கூட்டத்தைக் கடந்து செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டத்தார், 'இந்த மாசடைந்த உயிர் யாருடையது?' என்று கேட்பர். அதற்கு அவர்கள், 'இன்னார் மகன் இன்னாருடையது' என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அருவருப்பான பெயரைக் குறிப்பிடுவார்கள். இறுதியில் அந்த உயிருடன் பூமியின் (அருகிலிருக்கும் முதல்) வானத்திற்குப் போய்ச்சேர்வார்கள். அவருக்காக அந்த வானத்தைத் திறக்கக் கோருவார்கள். ஆனால் அவருக்காக வானம் திறக்கப்படாது"

இவ்வாறு கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''அவர்களுக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படா. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும்வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்'' எனும் (7:40) வசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து,

"பின்னர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், 'அவனது (வினைப்) பதிவேட்டை ஆகக் கீழ்நிலையில் உள்ள ஸிஜ்ஜீன் எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள்' என்று கூறுவான். உடனே அவரது உயிர் வேகமாக வீசியெறிப்படும்" இவ்வாறு கூறிய நபி (ஸல்) அவர்கள், '...
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர், வானத்திலிருந்து தரைவியில் விழுந்து, பறவைகள் அவரை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவார்" (அல்குர்ஆன் 22:31) எனும் வசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து,

"பின்னர் அவரது உயிர் (பூமியிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும். அவரிடம் இரு வானவர்கள் வந்து அவரை எழுப்பி அமரவைப்பர். பின்னர் அவரிடம், 'உன்னுடைய இறைவன் யார்?' என்று கேட்பர். அதற்கு அவர் 'அந்தோ! எனக்கு எதுவும் தெரியாதே!' என்று கூறுவார். அவ்விருவரும், 'உனது மார்க்கம் எது?' என்று கேட்பர். அவர், 'அந்தோ! எனக்கு எதுவும் தெரியாதே!' என்பார். அடுத்து 'உங்களிடையே அனுப்பப்பட்டிருந்த இன்னார் யார்?' என்று (என்னைப் பற்றி) அவ்விருவரும் கேட்பர். அப்போதும் அவர், 'அந்தோ! எனக்கொன்றுமே தெரியாதே!' என்று பதிலளிப்பார்.

அப்போது வானத்திலிருந்து, 'என் அடியான் பொய்யுரைத்துவிட்டான். எனவே, அவனுக்கு நரகத்தின் விரிப்புகளிலிருந்து
(ஒரு விரிப்பை) விரித்துக்கொடுங்கள்; அவனுக்காக நரக வாசல் ஒன்றைத் திறந்துவிடுங்கள்' என்று அறிவிப்பு வரும். நரகத்தின் வெப்பமும் கடும் அனலும் அவரிடம் வரும். அவரை அவரது மண்ணறை(யின் இரு பக்கமும்) நெருக்கும். அதனால் அவரது விலா எலும்புகள் இடம் மாறும். அவரிடம் அவலட்சணமான முகமும் அருவருப்பான உடையும் துர்வாடையும் உள்ள ஒருவர் வந்து, 'உனக்கு வருத்தமளிக்கும் செய்தி செய்தியொன்றைச் சொல்கிறேன் கேள்; இதுதான் உமக்கு வாக்களிக்கப்பட்ட நாள் ஆகும்' என்பார். அப்போது அவர், அந்த அவலட்சணமானவரிடம் 'நீர் யார்? உமது முகம் தீமையைக் கொண்டுவரும் முகமாக உள்ளதே!' என்று கேட்பார் அதற்கவர், 'நான்தான் நீ செய்த தீய செயல்கள்' என்பார். உடனே அந்த இறைமறுப்பாளர், 'என் இறைவா! யுக முடிவு நாளை (இப்போது) ஏற்படுத்திவிடாதே' என்று கதறுவார்" என்று நபி (ஸல்) விளக்கினார்கள் - அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல்கள் - அஹ்மத் 18063, அபூதாவூத் 4753).

ஷஹாதத் எனும் கலிமா என்பது வெறும் வாயால் மொழிவது மட்டுமல்ல. தேடுதல் அடிப்படையில் ஏக இறைவனை நெஞ்சாறயேற்று ஓரிறைக் கொள்கையை உறுதியாகப் பற்றிப்பிடித்து நடைமுறைப்படுத்துவதாகும்! இம்மை வாழ்வில் மனிதன் எதில் உறுதியாக இருந்து, கொள்கையளவில் தாம் உறுதி செய்தவற்றை சிந்தனையில் பதிவுசெய்து, இவ்வுலக வாழ்வில் கடைப்பிடித்து வாழ்கிறாரோ அதுவே மரணத்திற்குப் பின்னர் நிகழும் ஆன்ம வாழ்வில் வெளிப்படும்.

உலக வாழ்க்கையில் அகமொன்று வைத்து, புறமொன்றுப் பேசி சமர்த்தியமாகத் தப்பித்து விடுவதுபோல், மனிதன்  மரணித்த பின்னர் மண்ணறை விசாரணையில் அவனது எந்தக் கெட்டிக்காரத்தனமும் எடுபடாது!

இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்பட்டு வழிப்பட்டோரை இம்மை, மறுமை ஈருலகத்திலும் உறுதியான வார்த்தைகளைக் கொண்டு அல்லாஹ் நிலைபெறச் செய்கிறான். ஒருவர் இம்மையில் எந்தக் கொள்கையில் உறுதியாக இருந்தாரோ அதுவே மண்ணறை விசாரணையிலும் வெளிப்படும்.

திருக்குர்ஆன் 14:27வது வசனத்தின் கருத்து என்பது கப்ரு விசாரணையைப் பற்றியே அல்லாஹ் குறிப்பிடுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விளக்கியுள்ளார்கள்:

"ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும்போது, அவர் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள்' என்று உறுதிமொழி கூறுவார். இதுதான் '(இறை) நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்படுத்துகிறான்' எனும் (14:27 வது) இறை வசனத்தின் கருத்தாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் - அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல்கள் - புகாரி 1369, 4699, முஸ்லிம் 5508, 5509, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).
இந்த வசனம் மண்ணறை வேதனை சம்பந்தமாகவே அருளப்பட்டது என ஷுஃபாவின் அறிவிப்பில் காணப்படுகிறது.
"உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிற வரைக்கும் இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் - அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (நூல்கள் - புகாரி 1379, 3240, 6515. முஸ்லிம் 5500, 5501, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக்).

"ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை அந்த மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, 'முஹம்மத் என்பவரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன், 'அவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் அதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி(விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்ளையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கதறுவான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் - அறிவிப்பவர் அனஸ் (ரலி) (நூல்கள் - புகாரி 1338, 1374. முஸ்லிம் 5505. நஸயீ, அபூதாவூத், அஹ்மத்)
நாடு, மொழி, இனம், நிறம், சாதி, மதம், கொள்கை, சிந்தனை எனப் பலவற்றிலும் வேறுபட்டு வாழும் மனித இனம் "மரணம் என்பது எந்த உயிருக்கும் தவிர்க்க முடியாதது; வந்தே தீருவது" என்பதில் மட்டும் ஒத்த கருத்துக் கொண்டிருக்கிறது. கூடுதலாக, "மரணத்தை அடுத்து மண்ணறை வாழ்க்கை; இறைவனின் இறுதித் தீர்ப்புக்குப் பின்னர் நிரந்தர வாழ்க்கை"  என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. தவிர்க்கவே முடியாத, எந்த நேரமும் நாம் எதிர்கொள்ள வேண்டிய மண்ணறை வாழ்க்கையைப் பற்றி நம்பிக்கை கொண்டுள்ள நாம், அதில் எந்த அளவு உறுதியாய் இருக்கிறோம்? சத்தியமான அந்த வாழ்க்கைக்காக நாம் எந்த வகை தயாரிப்பில் இருக்கிறோம்? எனும் சுயபரிசோதனை செய்து கொள்வதற்கு இந்த ஆக்கம் உந்துகோலாக அமையட்டுமாக!
சரியான பதில்களைக் கூறி  மண்ணறை வாழ்வில் வெற்றி பெறுபவர்களாக நாம் ஆவதற்கு வல்ல அல்லாஹ்வின் பேரருளை வேண்டுவோம்; மண்ணறை வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டிய முயற்சிகளில் முனைப்புக் காட்டுவோம்; வெற்றியடைவோம், இன்ஷா அல்லாஹ்!

Saturday, 5 April 2014

சரித்திரப் பார்வையில் மூடர் தினம்! (April Fool)

APRIL FOOL
இறைவனின் நேரிய வழிகாட்டுதல்களும், அறிவுப்பூர்வமான எந்த வித கொள்கைளும் இல்லாமல் தம்முடைய மனோஇச்சைகளையே தங்களின் கொள்கைகளாகவும் வாழ்க்கை நெறியாகவும், கடவுளாகவும் பின்பற்றி வாழக்கூடியவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் குறிப்பிட்ட தினங்களை முக்கியப்படுத்தி அவைகளுக்கு முக்கியத்துவம் தந்து அந்த நாட்களை கொண்டாடுவது ஆகும்.
இவ்வகையான கொண்டாட்டங்களில் காதலர் தினம், மனைவியர் தினம், அன்னையர் தினம், மூடர் தினம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வகையான தினங்களைக் கொண்டாடுவோர் அவற்றுக்காக ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் கூறுவர். இந்த சிறிய கட்டுரையில் இவர்கள் மூடர் தினம் (ஏப்ரல் ஃபூல்) என கொண்டாடும் தினத்தைப் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.
மூடர் தினத்தின் தோற்றம் குறித்த கருத்துக்கள்: -
மூடர் தினத்தின் தோற்றம் குறித்த பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றது. இருப்பினும் இதன் தோற்றம் குறித்த உறுதியான கருத்து என்று எதுவும் கூறுவதற்கில்லை.
இதன் தோற்றம் குறித்த கருத்துக்களில் மிகவும் பிரபலமாகக் கருதப்படும் சிலவற்றைக் காண்போம்: -
1) பண்டைய அறியாமைக் கால பழக்கம்: -
சிலரது கூற்றுப்படி, பண்டைய காலத்தில் வாழ்ந்த அறியாமைக் கால மக்கள் ஏப்ரல் 1 அல்லது மார்ச் 21 ஆம் தேதியை மையமாக வைத்து வரக்கூடிய ‘சம இரவு தினம்’ (vernal equinox) என்றழைக்கடும் (பூமியின் வடக்கு அரைக்கோளத்தில்) வசந்த காலத்தின் துவக்க தினத்தை திருவிழா தினமாக கொண்டாடி வந்தனர். இந்த தினத்தில் கேலியும் கிண்டல்களும் அடங்கிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வந்தனர்.(1)
2) புதிய வருடப்பிறப்பு அறிமுகமாதல்:-
கி.பி. 1582 ஆம் ஆண்டு கிறிஸ்தவ போப் கிரிகோரி XIII என்பவர் புதிய காலன்டரை அறிமுகப்படுத்தி ஜனவரி 1 ஆம் தேதியை புதிய ஆண்டின் துவக்க நாளாக மாற்றியபோது அதுவரை ஜூலியன் காலன்டர் முறைப்படி ஏப்ரல் ஒன்றாம் தேதியை தங்களின் வருடப்பிறப்பாக கொண்டாடி வந்தவர்கள் இந்த புதிய காலன்டரை ஏற்க மறுத்தனர். அவர்களை கேலி செய்யும் விதமாக இந்த புதிய காலன்டரை தினித்தவர்கள் ஜனவரி முதல் தேதியை வருடப்பிறப்பாக ஏற்க மறுத்தவர்களை கேலியும், கிண்டலும் செய்யும் விதத்தில் அவர்களை மூடர்களாக்குகின்ற விதத்தில் பொய்களையும் போலியான பரிசுப் பொருட்களையும் அனுப்பி வைத்து மகிழ்ந்தனர். இந்த அறிவீனமான செயல் பின்னர் படிப்படியாக ஐரோப்பியா முழுவதும் பரவலாயிற்று. (2)
3) முஸ்லிம்களிடமிருந்து ஸபெயினைக் கைப்பற்றுதல்: -
ஸபெயினை முஸ்லிம்கள் ஆட்சி செய்த போது அவர்களின் படை மிகவும் வலிமை மிக்கதாகவும் எதிரிகள் கண்டு அஞ்சக் கூடியதாகவும் அமைந்திருந்தது. அதைக் கண்டு பொறுக்காத இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களை அழித்துவிட துடித்தனர். இருப்பினும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அதற்கான காரணத்தை அவர்கள் ஆராயும் போது முஸ்லிம் படையினர் சிறந்த ஈமான் தாரிகளாகவும் இறையச்சமுடையவர்களாகவும் இருப்பதைக் கண்டனர்.
முஸ்லிம்களை வெல்ல வேண்டுமானால் அவர்களின் நம்பிக்கையைக் சிதைப்பதை விட வேறு வழியில்லை என்பதை உணர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்களுக்கு மதுபானத்தையும் சுருட்டுகளையும் இலவசமாக அனுப்பி வைத்தனர். அதைப் பயன்படுத்த துவங்கிய முஸ்லிம்கள் நாளடைவில் தங்களது ஈமானில் உறுதியழந்து பின்னர் படிப்பபடியாக தங்களின் வலிமையிலும் வலுவிழந்தனர்.
இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிறிது சிறிதாக முஸ்லிம்கள் வசம் இருந்த ஸ்பெயினின் பகுதிகளைக் கைப்பற்றலாயினர். இறுதியில் முஸ்லிம்களின் கோட்டையாக விளங்கிய கிரினாடாவில் உள்ள பகுதியை ஏப்ரல் முதல் தினத்தன்று கைப்பற்றினர். அந்த நாள் முதல் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் தேதியை மூடர்களின் தினமாக அவர்கள் கொண்டாடி வருகின்றனர். (3)
இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல் தினம்!: -
இந்த வகை மூடர் தினத்தின் தோற்றம் குறித்து கூறப்படும் கருத்துக்களில் உண்மையானது எதுவாக இருந்தாலும் முஸ்லிம்கள் இந்த தினத்தைக் கொண்டாடுவதோ அல்லது அந்த தினத்தில் ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதோ இஸ்லாத்தில் அனுமதிக்கபடாதவைகளாகும்.
மூடர் தினத்தை முஸ்லிம்கள் ஏன் கொண்டாடக் கூடாது?
1) ஜாஹிலிய்யாக் (அறியாமைக்) காலத்தின் அனைத்து மூடப்பழக்க வழக்கங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக வந்தவர்கள் தான் நமது நபி (ஸல்) அவர்கள். நாம் அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டுமேயல்லாது அறியாமைக்கால மக்களின் பழக்கங்களாகிய பிறரைக் கேலி, கிண்டல் செய்து அவர்களை ஏமாற்றி அதன் மூலம் சந்தோசமடைவதைப் பின்பற்றக் கூடாது.
2) கிறிஸ்தவ பாதிரியாரான போப் கிரிகோரி என்பவர் துவக்கிய புதிய காலன்டரைப் பின்பற்றாதவர்களை கேலி செய்வதற்காக உருவாக்கியதாகக் கருதப்படும் இந்த தினத்தைக் கொண்டாடுபவர்கள் அவர்களின் இத்தீய செயல்களுக்குத் துணைபோவதோடு அல்லாமல் நபி (ஸல்) அவர்களின் ‘யார் அந்நிய சமூகத்தவர்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே!’ என்ற எச்சரிக்கையை மீறி செயல்பட்டவரைப் போலாவார்.
3) போதைப் பொருட்களுக்கு முஸ்லிம்களை அடிமையாக்கி அதன் மூலம் அவர்களை மூடர்களாக்கி அவர்களின் மனவலிமையை இழக்கச் செய்து அதன் மூலம் தந்திரமாக ஸ்பெயின் நாட்டை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றி அதைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்து ஒரு முஸ்லிமும் கொண்டாடுவாரானால் அவரை விட வேறு ஒரு மூடர் இருக்க முடியுமா? ஏனென்றால் இது தம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் மூடர்களாக்கப்பட்டதை தாமே கொண்டாடுவது போலாகாதா?
4) இந்த மூடர் தினத்தித்தின் தோற்றம் குறித்த மேலே குறிப்பிடப்பட்ட காரணங்கள் எதுவாக இருந்தாலும் அல்லது இவைகளல்லாத வேறு எந்தக் காரணமாக இருந்தாலும் அவைகள் அனைத்துமே முஸ்லிம்களால் தோற்றுவிக்கப்படவில்லை. மாறாக இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் இஸ்லாத்தின் எதிரிகளால் தோற்றுவிக்கப்பட்டது. எனவே தம்மை முஸ்லிம் எனக் கூறிக்கொள்ளும் எவரும் இத்தகைய தீய செயல்களிலிருந்து விலகியிருப்பதோடல்லாமல் மற்றவர்களுக்கு இதன் தீமைகளை எடுத்துக் கூற முன்வரவேண்டும்
5) இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தினங்களைக் கொண்டாடுபவர்கள் செய்யும் காரியங்களாவன: -
a. பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வது
b. பிறரை ஏமாற்றி அவர் ஏமாந்து துன்பப்படும் போது அதைப் பார்த்து ரசிப்பது

c. போலியான பரிசுப்பொருட்களை பிறருக்கு அனுப்பி அவரை கேலி செய்வது
d. ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் (தாய், தந்தை அல்லது மனைவி போன்றவர்கள்) இறந்து விட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டு அவரை வேதனைப் படுத்தி அதை ரசிப்பது
e. ஒரு நாட்டின் தலைவர் இறந்து விட்டதாக அல்லது மிக மோசமான ஒரு விபத்து ஏற்பட்டு விட்தாக வதந்நியைக் கிளப்புவது
f. இது போன்ற ஏராளமான பொய்யான தகவல்களையும் கேவலத்திற்குரிய செயல்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவைகள் அனைத்துமே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் மடடுமின்றி இதைச் செய்பவர்களுக்கு மிக கடுமையான எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றது.
பொய் பேசுவதன் தீமைகள்: -
1) பொய்யுரைப்பவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள்: -
அல்லாஹ் கூறுகிறான் :
16:105 நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)
2) முனாஃபிக்கின் (நயவஞ்சகனின்) அடையாளங்களில் ஒன்று பொய்யுரைப்பது: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்குர்ஆன் 9:77)
3) பொய் பேசுவது நரகத்திற்கு வழிவகுக்கும்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), ஆதாரம்: புகாரி
4) பரிகசிப்பது மற்றும் கேலி செய்வது அறிவீனர்களின் செயல்: -
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், ‘நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்’ என்று சொன்னபோது, அவர்கள் ‘(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?’ என்று கூறினர்; (அப்பொழுது) அவர், ‘(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று கூறினார். (அல்குர்ஆன் 2:67)
5) பொய் பேசுபவனுக்குரிய தண்டனைகள்: -
சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்’ என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் – பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?’ என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்’ என்றனர்.
….
நான் அவ்விருவரிடமும், ‘நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?’ என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், ‘(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.

தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.
அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்(ரலி, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)
6) விளையாட்டுக்காகக் கூட பொய் பேசக் கூடாது: -
முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆதாரம் : திர்மிதி
இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய் பேசுவது கூட தடுக்கப்பட்டுள்ளது. அது போல பிறரை சந்தோசப்படுத்துவதற்காகவும் பொய் பேசக் கூடாது.
எனவே சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான பொய் பேசுதல், பிறரை துன்புறுத்தி சந்தோசம் அடைதல், ஏமாற்றுதல் ஆகியவைகளையே முழு மூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாhம் தவிர்ந்திருப்பதோடு அல்லாமல் பிறருக்கும் இதனுடைய தீமைகளை எடுத்துக் கூறி இதனை நமது சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் மனவலிமையையும் தந்தருள்வானாக.
அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுல்லாஹி வ பரகாதுஹூ

Saturday, 1 March 2014

பேஸ்புக் ஆபத்தானது



சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது.

தற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும்.


Dailymotion

Yahoo
மேலே உள்ளது நண்பர்கள்  பார்த்த வீடியோ எனவும், படித்த கட்டுரை எனவும் பேஸ்புக்கில் வந்த செய்தி. இது போன்று ஆபாச படங்கள் பார்த்ததாகவும் செய்தி வரும். இதை நம்பி நாம் க்ளிக் செய்தால் பின்வருமாறு காட்டும்,


எந்தவொரு பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்தினாலும் இது போல காட்டும். அதாவது உங்கள் பேஸ்புக் கணக்கை அந்த அப்ளிகேசன் அணுகுவதற்கு அனுமதி கேட்கும். மேலுள்ள படத்தை நன்றாக பாருங்கள். 

This app may post on your behalf, including videos you watched, films you watched and more.
அதாவது  நீங்கள் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினால் உங்கள் கணக்கில் இருந்து செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பும். இதன் மூலம் Spamசெய்திகளை அனுப்புவதற்கு நீங்களே அனுமதி அளிக்கிறீர்கள்.

அவ்வாறு  க்ளிக் செய்த பின் அது அந்த தளத்திற்கு சென்றுவிடும். அங்கு நீங்கள் எதை க்ளிக் செய்கிறீர்களோ அவையும், சில சமயம் க்ளிக் செய்யாதவைகளும் நீங்கள் பார்த்ததாக உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கு செய்தி அனுப்பிவிடும்.

இதனை  தவிர்ப்பது எப்படி?

இவற்றிலிருந்து தவிர்க்க வேண்டுமெனில் இது போன்ற சுட்டிகளை க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும். தவறுதலாக க்ளிக் செய்தாலும் Dailymotion, Yahooபோன்ற Third-Party Applications-களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

ஏற்கனவே நீங்கள் க்ளிக் செய்து அனுமதி கொடுத்துவிட்டீர்கள் என்றால் அந்த அப்ளிகேசன்களை உங்கள் கணக்கிலிருந்து நீக்கிவிடுங்கள்.

அப்ளிகேசன்களை நீக்குவது எப்படி?

உங்கள் பேஸ்புக் கணக்கில் Account settings என்பதை க்ளிக் செய்து, இடது புறம் உள்ள Apps என்பதை க்ளிக் செய்தால், நீங்கள் பயன்படுத்திவரும் அனைத்து அப்ளிகேசன்களையும் காட்டும். 


மேலே உள்ள DailymotionYahoo என்பதற்கு பக்கத்தில் உள்ள X குறியீடை க்ளிக் செய்து அதனை நீக்கிவிடுங்கள். இது போன்ற அனைத்து அப்ளிகேசன்களையும் நீக்கிவிடுவது சிறந்தது.

எக்காரணம் கொண்டும் Third Party Application-களை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சிறு வேண்டுகோள்: இது பேஸ்புக்கில் தற்போது பரவிவரும் முக்கிய பிரச்சனை என்பதால் தாங்கள் பேஸ்புக்கில் இதனை பகிர்ந்தால் பலர் இதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.

Sunday, 19 January 2014

காலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி?

காலுறை அணிந்து ஒளு எடுக்கும் போது தண்ணீரைக் கொண்டு காலுறை மீது முழுவதுமாக தடவ வேண்டுமா? அல்லது காலுறையின் எதாவது ஒரு இடத்தில தடவினால் போதுமா? அல்லது மேல், கீழ் பாகத்தில் தடவினால் போதுமா?
தொழுகைக்காக உளூச் செய்யும்போது தண்ணீரால் கழுவித் தூய்மைப்படுத்த வேண்டிய உறுப்புகளில், இரு கால்களையும் கரண்டைவரை கழுவவேண்டும் என இறைமறை வசனம் (005:006) கூறுகின்றது. 

கால்களைக் கழுவித் தூய்மைப்படுத்தியபின் காலுறைகள் அணிந்திருந்து பின்னர் உளூ முறிந்து மீண்டும் உளூச் செய்யும்போது, காலுறைகளைக் கழட்டி கால்களைக் கழுவாமல், ஈரக் கையால் காலுறைகள் மீது தடவிக்கொண்டால் போதும் ஒளு நிறைவு பெற்றுவிடும் என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நடைமுறைச் சட்டமாகவுள்ளது.

உளூச் செய்யும்போது கால்களைக் கழுவிக் கொள்ளாமல் காலுறைகள் மீது ஈரக் கையால் தடவிக் கொள்வதற்கான கால வரம்பு, பயணத்திலிருப்பவருக்கு மூன்று பகல் மூன்று இரவுகள் ஆக மூன்று நாட்களும், உள்ளூரில் இருப்பவருக்கு ஒரு பகல் ஓர் இரவு ஆக ஒரு நாள் எனவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கால வரம்பு நிர்ணயித்துள்ளார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் காலுறைகள்மீது மஸ்ஹுச் செய்வது குறித்துக் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள், "நீங்கள் அலீ பின் அபீதாலிப் அவர்களை அணுகிக் கேளுங்கள். அவர்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராய் இருந்தார்கள்" என்று கூறினார்கள். எனவே, அலீ (ரலி) அவர்களிடம் (சென்று) அதைப் பற்றிக் கேட்டோம். அப்போது அவர்கள், "பயணத்திலிருப்பவருக்கு மூன்று பகல் மூன்று இரவுகளையும், உள்ளூரிலிருப்பவருக்கு ஒரு பகல் ஓர் இரவையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) நூல்கள்: முஸ்லிம் 465, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ).

உள்ளூரில் இருப்பவர் உளூச் செய்யும்போது காலுறைகள் மீது ஈரக் கையால் மஸ்ஹுச் செய்வதற்கான கால வரையறை ஒரு நாள் என்றும்  பயணத்திலிருப்பவருக்கு மூன்று நாள் சலுகை என்றும் மேற்காணும் அறிவிப்பிலிருந்து விளங்குகிறோம்.

காலுறைகள் மீது ஈரக் கையால் தடவிக்கொள்வது

நான் ஒரு பயணத்தில் ஓரிரவு நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், "உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நான், "ஆம்! (இருக்கிறது)" என்று பதிலளித்தேன். உடனே அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவுக்கு நடந்தார்கள். (இயற்கைத் தேவையை முடித்த) பிறகு அவர்கள் வந்தார்கள். நான் குவளையிலிருந்த நீரை ஊற்றினேன். அவர்கள் தமது முகத்தைக் கழுவினார்கள். அப்போது கம்பளி நீளங்கி அணிந்திருந்தார்கள். ஆதலால், அங்கியிலிருந்து தம் முழங்கைகளை வெளியே எடுக்க அவர்களால் இயலவில்லை. ஆகவே, முழங்கைகளை அங்கியின் கீழிருந்து வெளியே எடுத்துக் கழுவினார்கள். பிறகு தமது தலையை (ஈரக் கையால்) தடவி(மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு நான் அவர்களின் காலுறைகள் இரண்டையும் கழற்ற முனைந்தேன். அப்போது அவர்கள், "அவற்றை விட்டுவிடுவீராக! ஏனெனில், நான் (என் கால்கள்)இரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்திருந்தேன்" என்று சொல்லி, (ஈரக் கையால்)அவற்றைத் தடவிக் கொண்டார்கள். (அறிவிப்பாளர்: முஃகீரா பின் ஷுஃபா (ரலி) நூல்கள்: புகாரி 363, முஸ்லிம் 459, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் உளூச் செய்தார்கள். (அப்போது கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகள் மீது தடவி(மஸ்ஹு செய்திடலா)னார்கள். அவர்களிடம்(இது குறித்து), "இவ்வாறு செய்யலாமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "ஆம்(செய்யலாம்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் உளூச் செய்வதை நான் பார்த்தேன். (அப்போது) அவர்கள் தம் (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) காலுறைகள் மீது தடவி(மஸ்ஹு செய்திடலா)னார்கள்" என்று பதிலளித்தார்கள்.(அறிவிப்பவர்: ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) நூல்கள்: புகாரி 387, முஸ்லிம் 452, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், அஹ்மத்).

இந்த அறிவிப்புகளிலிருந்து, காலுறைகள் அணிந்திருந்தால் உளுச் செய்யும்போது காலுறைகளைக் களைந்துவிட்டு  கால்களைக் கட்டாயம் கழுவவேண்டும் என்கிற சட்டம் இல்லை. மாறாக, காலுறைகள் மீது ஈரக் கையால் தடவிக் கொண்டாலே போதுமானது என்று விளங்குகிறோம்.

காலுறையின் எந்தப் பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்வது?

பொதுவாக, அனைத்து அறிவிப்புகளிலும், நபி (ஸல்) அவர்கள் அணிந்திருந்த காலுறைகள் மீது ''ஈரக் கையால் தடவினார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது. திர்மிதீ நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள ஓர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் ''கால்களின் மேற்புறமும், கீழ்ப்புறமும் தடவிக் கொண்டார்கள்'' என்று பதிவாகியுள்ள அறிவிப்பில் இடம்பெறும் வலீத் பின் முஸ்லிம் என்பவர் நபிமொழி அறிவிப்புகளில் அதிகம் தவறிழைப்பவர் என்றும் இது குறைபாடுள்ள அறிவிப்பாகும் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் (உளூச் செய்யும்போது தம் கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகளின் மேற்புறத்தைத் தடவிக் கொண்டதை நான் பார்த்திருக்கிறேன். (அறிவிப்பாளர்: முஃகீரா பின் ஷுஃபா (ரலி) நூல்: திர்மிதீ 98).

இது ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸாகும் என இமாம் திர்மிதீ குறிப்பிடுகின்றார்கள்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும், அப்துர்ரஹ்மான் பின் அபிஸ்ஸினாத் என்பவரைக் குறித்து மாலிக் (ரஹ்) அவர்கள் விமர்சித்துள்ளதாக இமாம் புகாரி அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆயினும், இந்த அறிவிப்பை வலுப்படுத்தும் வகையில் நபித்தோழர் அலீ (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் உள்ளதால் இவ்வறிவிப்பு 'ஹஸன்-ஸஹீஹ்' என்கிற நிலைக்கு உயர்கிறது.

மார்க்கம் மனித அபிப்பிராயத்தின்படி அமைந்திருப்பின் காலுறையின் அடிப்பாகமே அதன் மேல்பாகத்தைவிட மஸ்ஹுச் செய்வதற்குத் தகுதியானதாகும். ஆனால், ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் மேற்புறத்தின் மீது மஸ்ஹுச் செய்வதைப் பார்த்திருக்கிறேன்'' என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்து கைர் (ரஹ்) நூல்: அபூதாவூத் 162).

செயல் முறை

கால்கள் சுத்தமாக இருக்கும் நிலையில் காலுறைகளை அணிந்திருந்தால் உளூ முறிந்து விட்டாலும் காலுறைகள் அணிவிக்கப்பட்டக் கால்களின் தூய்மை நிலை மாறுவதில்லை. அதனால் மறு உளூவின் நிபந்தனைகளிலிருந்து காலுறைகள் அணிந்த கால்கள் கழுவப்பட வேண்டியதில்லை எனும் விதிவிலக்குப் பெறுகின்றன. எனினும், ஈரக் கையால் காலுறைகளின் மேற்புறத்தைத் தடவ வேண்டும்.

காலுறைகள் அணிந்து ஷூ அணிந்த நிலையில் உளூச் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது காலுறைகளின் மேற்பகுதி மட்டுமே வெளிப்படும். எனவே, கால்களின் மேற்பகுதியை ஈரக் கையால் தடவிக் கொள்ள வேண்டும். அல்லது ஷூவிலிருந்து கால்களை உருவி வெளியிலெடுத்து காலுறையின் மேற்புறத்தில் தடவிக் கொள்ளலாம்.  இதுவே ''நபி (ஸல்) அவர்கள் காலுறைகளின் மீது ஈரக் கையால் தடவினார்கள்'' என்பதற்குப் பொருத்தமாகவுள்ளது.

காலுறையின் மேற்புறத்தில் ஏதாவது ஒரு பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொண்டால் போதுமானது. இது தவிர நாமறிந்து, காலுறைகள் அணிந்து உளூச் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை வேறொன்றும் இல்லை!