அனைத்துப் புகழும் அகில உலகையும் படைத்தது பரி பக்குவப்படுத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே உரித்தாகுக -

Thursday, 30 May 2013

ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா

ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்று ஹதீஸ் உள்ளதா?


ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை. ஆனால் குர்ஆன் வசனங்கள் இக்கருத்தைக் கூறுவதாக சிலர் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனர். 

குர்ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் கொண்டு இந்தத் தவறை செய்து வருகின்றனர்.

 لزَّانِي لَا يَنكِحُ إلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ وَحُرِّمَ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ(3)24 

விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். 

இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது. அல்குர்ஆன் (24 : 3) ஒருவன் விபச்சாரம் செய்தால் அவனுடைய மனைவியும் விபச்சாரம் செய்வாள் என்று கூறுவோர் இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஆனால் சற்று சிந்தித்தால் இந்த வசனம் இவர்கள் கூறுகின்ற கருத்தைத் தரவில்லை என்பதை அறியலாம். ஒரு விபச்சாரனுக்கு ஒழுக்கமுள்ள பெண் மனைவியாகக் கூடாது. 

அதே போன்று ஒரு விபச்சாரிக்கு ஒழுக்கமுள்ள ஆண் கணவனாகக் கூடாது. மாறாக ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கமுள்ளவரையே தன்னுடைய வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்ய வேண்டும். விபச்சாரனுக்கு அவனைப் போன்று விபச்சாரம் செய்யும் பெண்ணே மனைவியாகத் தகுதியானவள். ஒரு விபச்சாரிக்கு அவளைப் போன்று விபச்சாரம் செய்யும் ஆணே கணவனாகத் தகுதியானவன் என்ற கருத்தையே இவ்வசனம் கூறுகின்றது. 

அதாவது திருமணம் செய்ய நினைப்பவர் எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலே இவ்வசனத்தில் கூறப்படுகின்றது. இவ்வசனத்தின் இறுதியில் இடம் பெற்றுள்ள இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது என்ற வாசகம் இக்கருத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றது. பின்வரும் வசனமும் இதே கருத்தை எடுத்துரைக்கின்றது.

 لْخَبِيثَاتُ لِلْخَبِيثِينَ وَالْخَبِيثُونَ لِلْخَبِيثَاتِ وَالطَّيِّبَاتُ لِلطَّيِّبِينَ وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ أُوْلَئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَ لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ(26)24 

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (தகுதியானோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). அவர்கள் (நயவஞ்சகர்கள்) கூறுவதை விட்டும் இவர்கள் (நல்லோர்) நீங்கியவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு. அல்குர்ஆன் (24 : 26) மேலும் இந்த வசனம் இறங்கியதற்கான காரணம் ஹதீஸில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நபித்தோழர் ஒருவர் விபச்சாரம் செய்து கொண்டிருந்த பெண்ணை மணமுடிக்க நாடிய போது அதைத் தடை செய்து இவ்வசனம் இறங்கியது.

 1755حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ التَّيْمِيُّ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ مَرْثَدَ بْنَ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيَّ كَانَ يَحْمِلُ الْأَسَارَى بِمَكَّةَ وَكَانَ بِمَكَّةَ بَغِيٌّ يُقَالُ لَهَا عَنَاقُ وَكَانَتْ صَدِيقَتَهُ قَالَ جِئْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنْكِحُ عَنَاقَ قَالَ فَسَكَتَ عَنِّي فَنَزَلَتْ وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ فَدَعَانِي فَقَرَأَهَا عَلَيَّ وَقَالَ لَا تَنْكِحْهَا رواه أبو داود 

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : மர்ஸத் பின் அபீ மர்ஸத் அல்ஃகனவீ என்பவர் மக்காவிலிருந்து (மதீனாவிற்கு) கைதிகளை அழைத்து வந்தார். மக்காவில் அனாக் என்று கூறப்படும் ஒரு விபச்சாரி இவருக்குத் தோழியாக இருந்தாள். அவர் கூறுகிறார் : நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே அனாக்கை நான் திருமணம் செய்யப் போகிறேன் என்று கூறினேன். அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள் எனும் (24:3 வது) வசனம் இறங்கியது. உடனே அவர்கள் என்னை அழைத்து இதை என்னிடம் ஓதிக்காட்டி அவளை மண முடிக்காதே என்று கூறினார்கள். நூல் : அபூதாவூத் (1755) 

ஆணோ பெண்ணோ வாழ்க்கைத் துணை தேடும் போது விபச்சாரம் செய்யாத நல்லொழுக்கமானவரையே தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தான் இது கூறுகிறது. அதே நேரத்தில் விபச்சாரம் செய்த ஆணோ பெண்ணோ தனது தவறை உணர்ந்து திருந்தி ஒழுக்கமாக வாழ்ந்தால் அப்போது விபச்சாரம் செய்தவர் என்ற பட்டியலில் சேர மாட்டார். பாவத்தில் இருந்து திருந்தியவர் பாவம் செய்யாதவரைப் போல் கருதப்படுவார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

விபச்சாரம் செய்யும் ஒருவனுக்கு விபச்சாரியே மனைவியாகக் கிடைப்பாள் என்ற கருத்து நடைமுறைக்குப் பொருந்தாத பொய்யான கருத்தாகும். ஏனென்றால் கணவன் ஒழுக்கம் கெட்டவனாக இருந்தும் கற்பைப் பேணி ஒழுக்கத்துடன் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர். இதே போன்று மனைவி ஒழுக்கம் கெட்டவளாக இருந்தும் ஒழுக்கத்துடன் வாழும் நல்ல கணவன்மார்களும் இருக்கின்றனர். 

இப்போது கணவன் ஒழுக்கம் கெட்டவன் என்பதால் அவனுடைய மனைவியும் ஒழுக்கம் கெட்டவள் என்றும் மனைவி ஒழுக்கம் கெட்டவள் என்பதால் அவளுடைய கணவனும் ஒழுக்கம் கெட்டவன் என்றும் முடிவு செய்வது விபரீத விளைவுகளை ஏற்படுத்துவதும் நல்லொழுக்கமுள்ளவர்களின் மீது வீண் பழி சுமத்துவதாகும். எனவே யாருக்கு யார் மனைவியாக அமைவார் என்பதைப் பற்றி இவ்வசனம் பேசவில்லை. மாறாக ஒருவர் தனக்கு வாழ்க்கைத் துணையாக எத்தகையவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற சட்டத்தைப் பற்றியே பேசுகின்றது

                                                                          onlinepj

திருமணத்தின் போது கழுத்துப்பட்டி அணியலாமா?

திருமணத்தின் போது கழுத்துப்பட்டி, Dress Code அணியும் வழக்கம் இலங்கை முஸ்லிம்களிடம் உள்ளது. இதற்காக பத்தாயிரம் முதல் பதினந்தாயிரம் வரை செலவு செய்கிறார்கள். சிலர் இந்த உடையை அதன் பின்னர் ஒரு தடவை கூட அணிவதில்லை. இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? 
பதில் : பொதுவாக உடைகளில் பல வகைகள் உள்ளன. அன்றாடம் பயன்படுத்தும் உடைகள் உள்ளன. முக்கியமான நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்தும் உடைகள் உள்ளன. பிரமுகர்களை சந்திக்கும் போது மட்டும் பயன்படுத்தும் உடைகளும் உள்ளன. குறைவாக பயன்படுத்தும் காரணமாக அதை வீணானது என்று கூற முடியாது. 948 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் கடை வீதியில் விற்பனை செய்யப்பட்ட தடித்தப்பட்டு நீளங்கி ஒன்றை விலை பேசமுற்பட்டார்கள். 

அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கி பெருநாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் (அணிந்து) அலங்கரித்துக்கொள்ளலாமே! என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடையாகும் என்று கூறினார்கள். 

(பிறகு என் தந்தை) உமர் (ரலி) அல்லாஹ் நாடிய நாட்கள் வரை (இது பற்றி ஏதும் கேட்காமல்) பொறுமையாக இருந்தார்கள். பிறகு (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அலங்காரப் பட்டாலான நீளங்கி ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். 

அதைப் பெற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடை என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். (பிறகு) நீங்களே இந்த அங்கியை என்னிடம் கொடுத்தனுப்பியுள்ளீர்களே? என்று கேட்டார்கள். 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இதை நீங்கள் விற்றுவிடலாம்; அல்லது இதன் மூலம் உங்களது (வேறு ஏதேனும்) தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளலாம் (என்பதற்காகவே வழங்கினேன்) என்று கூறினார்கள். புகாரி 948 பெருநாளின் போதும், பிரமுகர்களைச் சந்திக்கும் போதும் அரிதாக அணியும் ஆடையை அது பட்டாடை என்பதால் தான் மறுத்தார்கள். பட்டாடையாக இல்லாமல் இருந்தால் அது அனுமதிக்கப்பட்டது தான் என்பதில் சந்தேகம் இல்லை. 

ஆனால் திருமணத்தைச் சிக்கனமாக நட்த்த வேண்டும் என்று மார்க்கம் கூறுகிறது. திரும்ணத்தின் போது இது போன்ற உடை அவசியம் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டால் இல்லாதவர்களும் இதற்காக பணம் செலவு செய்யும் அவசியம் ஏற்பட்டு விடும். திருமணத்தின் செலவு இதனால் அதிகரிக்கும். திருமணத்துக்கு இந்த உடை அவசியம் என்ற சமுதாய நிர்பந்தம் ஏற்படுவது தான் இதில் உள்ள குற்றமாகும். 

எனவே இது போன்ற ஆடைகளை பொதுவாக ஒருவர் அணியலாம் என்றாலும் திருமணத்தின் சரத்துகளில் ஒன்றாக ஆக்கி மக்களுக்குச் சிரமத்தைக் கொடுப்பதால் இதைத் தவிர்ப்பது தான் நல்ல முஸ்லிமுக்கு அழகாகும். 

திருமணத்தில் இதுபோன்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து குறைந்த செலவில் நடத்தினால் தான் இறைவனுடைய அருள் கிடைக்கும். "குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்'' என்று  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: அஹ்மத் 23388

                                                                                            onlinepj

மத்ஹபைப் பின்பற்றும் பெண்ணை மணந்து கொள்ளலாமா

தவ்ஹீத் கொள்கையில் உள்ளவர் தன்னைப் போன்ற தவ்ஹீத் கொள்கையில் உள்ள பெண்ணை மணமுடிப்பதே நபிவழி.   


இதற்கு மாற்றமாக தர்ஹா போன்ற இணைவைப்புக் காரியங்களில் ஈடுபடும் பெண்கள் மத்ஹப் போன்ற பித்அத்களை பின்பற்றக்கூடிய பெண்கள் ஆகியோர் தவ்ஹீத் கொள்கையை ஏற்காதவரை அவர்களைத் திருமணம் செய்வது கூடாது.   

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். 

அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். (திருக்குர்ஆன் 2:221)   கொள்கையுள்ள பெண்ணை மணமுடித்தாலே வெற்றி கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.   

5090حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ رواه البخاري  

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :   நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 
  1. அவளது செல்வத்திற்காக.  
 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.  
 3. அவளது அழகிற்காக.   
4. அவளது மார்க்கத்திற்காக. 
ஆகவே, மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!   இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி (5090)   கொள்கையில் மாறுபட்டோரை திருமணம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.  

 நாங்கள் திருமணம் செய்து கொண்டு அந்தப் பெண்ணைத் திருத்தி விடுவோம் என்று காரணம் கூறி சிலர் இதை நியாயப்படுத்துகின்றனர். இவர்கள் அவர்களைத் திருத்துவதற்கு வாய்ப்பு உள்ளது போல் அவர்கள் இவர்களை வழிகெடுக்கவும் வாய்ப்பு உள்ளது. இன்னும் சொல்லப்போனால் பெண்கள் கை ஓங்குவதற்குத் தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. ஷிர்க் பித் அத் போன்ற காரியங்களாக இருந்தாலும், வரத்ட்சணை போன்ற கொடுமைகளாக இருந்தாலும் இது குறித்து ஆண்களிடம் நாம் கேட்டால் எங்களுக்கு இதில் விருப்பமில்லை; 

ஆனால் பெண்கள் நாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை என்ற பதிலைத் தான் சொல்கின்றனர்.   ஆண்களிடம் உள்ள பலவீனங்களைப் பயன்படுத்தி ஆண்களை தங்கள் விருப்பம் போல் பெண்கள் மாற்றி விடுவார்கள். இது தான் யதார்த்தமான நிலையாக உள்ளது.   இத்தகையோரைத் திருமணம் செய்தால் திருமணத்துக்குப் பின் கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் எழும். தாங்கள் பெற்ற பிள்ளையை எப்படி வளர்ப்பது என்பது கூட பிரச்சனையாக ஆகிவிடும். ஆண்கள் பெரும்பாலும் வீட்டில் இருப்பதை விட வெளியிலும், வெளியூரிலு, வெளிநாட்டிலும் இருப்பது தான் அதிகமாகும். 

எனவே தவறான கொள்கை உள்ள பெண்கள் தமது தவறான கொள்கையில் பிளைகளை மாற்றி விடும் ஆபத்து இருக்கிறது.   தவ்ஹீத் கொள்கையில் உள்ளவர்கள் மத்ஹபுக் கொள்கையில் உள்ள பெண்ணை மணமுடித்தால் இவர்களின் வாழ்விலும் பிரச்சனைகள் உருவாகும். கணவன் மனைவி ஒவ்வொருவரும் தனது கொள்கையில் உறுதியாக இருந்தால் பிரச்சனைகள் வளர்ந்து முடிவில் மணமுறிவு ஏற்படும்.   மனைவி செய்யும் தவறுகளையும், அநாச்சாரங்களையும் கண்டிக்க முடியாத சூழல் ஏற்படும். கண்டித்தால் கணவனுடைய கண்ணுக்கு முன்னால் மார்க்கத்திற்கு புறம்பான காரியங்களைச் செய்யாமல் இருந்து கொள்வார்கள். கணவன் இல்லாத நேரங்களில் இக்காரியங்களில் ஈடுபடுவார்கள்.   

மேலும் தவ்ஹீத் கொள்கையில் உள்ள பெண்கள் திருமணம் ஆகாமல் தவ்ஹீத் மாப்பிள்ளைக்காகக் காத்திருக்கும் போது இத்தகையவர்களை விட்டுவிட்டு கொள்கையில் மாறுபட்டவர்களைத் திருமணம் செய்வது தவ்ஹீத் பெண்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும். எனவே கொள்கையில் மாறுபட்ட பெண்களை மணமுடிப்பது கூடாது

                                                                               onlinepj

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மறுக்கலாமா

என் விருப்பமின்றி பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். எனக்கு இஸ்லாத்தில் உள்ள உரிமை என்ன? 


 பதில்  தனக்குப் பிடித்தவரைக் கணவனாக தேர்வு செய்ய பெண்ணிற்கு இஸ்லாத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணம் செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கன்னி கழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) அனுமதி பெறாமல் மண முடித்துக் கொடுக்க வேண்டாம்'' என்று சொன்னார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)'' என்று கேட்டார்கள். 

அதற்கு நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள், "அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்) என்று சொன்னார்கள்.  அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : புகாரி (5136)  கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.  அறிவிப்பவர் : கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா (ரலி)  நூல் : புகாரி (5138) 

 நீங்கள் விரும்பினால் உங்கள் வீட்டார் கூறுகின்ற மாப்பிள்ளையைத் தேர்வு செய்வதற்கும் உங்களுக்குப் பிடிக்காவிட்டால் மறுப்பதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு. உங்கள் பெற்றோர்கள் நிர்பந்தப்படுத்தினால் இத்திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என அவரிடம் நீங்கள் நேரடியாகவே கூறலாம். அல்லது உங்கள் பகுதியில் உள்ள ஜமாஅத்தார்களிடம் முறையிடலாம்.
                                                                  .onlinepj

மணமகனை விட ஒரு வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா?

ஆணோ பெண்ணோ பருவ வயதை அடைந்து விட்டால் அவர்கள் திருமணம் செய்யலாம். தன்னை விட வயது குறைவான பெண்ணைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று மார்க்கத்தில் சட்டம் இல்லை. 


ஆனால் அதன்  சாதக பாதகங்களை அறிந்து கொள்ளாமல் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து விட்டு பின்னர் கவலைப்படக் கூடாது. பெண்களின் தாம்பத்தியம் அவர்களின் மாதவிடாய் நிற்கும் வரை தான். அதன் பின்னர் அவர்களுக்கு அதில் போதுமான நாட்டம் இருக்காது. ஆனால் ஆண்களுக்கு மாதவிடாய் போன்ற பிரச்சனை இல்லாத்தால் அவர்கள் திடகாத்திரமாக இருந்தால் எழுபது எண்பது வயது வரை தாம்பத்தியத்தில் ஈடுபட இயலும். 25 வயது வாலிபன் 25 வயதுப் பெண்ணை அல்லது முப்பது வயதுப் பெண்ணை திருமணம் செய்தால் அந்தப் பெண்ணுக்கு 45 வயதில் மாதவிடாய் நின்று விடும் போது அந்த ஆணுக்கு 45 அல்லது நாற்பது வயது ஆக இருக்கும். இந்த வயது தாம்பத்தியத்தை அதிகம் நாடக் கூடிய வயதாகும். பெண்ணால் தாம்பத்திய சுகம் கொடுக்க முடியாத்தால் இவன் தவறான பாதையில் செல்லும் நிலை ஏற்படும். தேவை ஏற்பட்டால் கணவன் இன்னொரு திருமணம் செய்வதை அனுமதிக்கும் பெண்கள் அரபு நாடுகளில் உள்ளனர். ஆனால் இந்தியாவில் தன்னால் கணவனுக்கு சுகம் கொடுக்க முடியாவிட்டாலும் அவன் இன்னொரு திருமணம் செய்வதை பெண்கள் ஒப்புக் கொள்வதில்லை.

 இதனால் அவளை விவாகரத்து செய்யும் நிலை ஏற்படும். அல்லது கள்ளத்தனமான உறவுகள் மூலம் சுகம் அனுபவிக்கும் நிலை ஏற்படும். இதைப் பற்றியும் ஆலோசித்துக் கொண்டு மூத்த வயதுப் பெண்ணைத் திருமணம் செய்வது பற்றி முடிவு எடுக்க வேண்டும். இதைக் கவனத்தில் கொண்டு தான் ஆணை விட பெண்ணுக்கு ஐந்து அல்லது ஆறு வயது குறைவாக இருக்கும் வகையில் திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. பெண்கள் 15 முதல் 18 வயதுக்கு உள்ளேயும், ஆண்கள் 20 முதல் 25 வயதுக்கு உள்ளேயும் திருமணம் செய்தால் இருவருக்கும் சமகாலத்தில் தாம்பத்திய ஆசை குறைவதால் பிரச்சணைகள் வராமல் இருக்கும். மேலும் தள்ளாத வயதை அடைந்து விட்ட பெண்களுக்கு துணையாக கணவன் இல்லா விட்டாலும் பெண்களை மற்ற பெண்கள் நல்ல படி கவனித்துக் கொள்வார்கள். ஆனால் மனைவியை இழந்த கணவன் தள்ளாத வயதை அடைந்து விட்டால் அவனை யாரும் கவனிக்க மாட்டார்கள்.

 ஏனெனில் பெண்களிடம் தான் கவனித்துக் கொள்ளும் தன்மை இயல்பாகவே உள்ளது. படுக்கையில் மலஜலம் கழிக்கும் முதிய வயது ஆணை எந்த ஆணும் கவனிக்க மாட்டார்கள். பெண்களாலும் கவனிக்க இயலாமல் போகும். ஆனால் பெண்களின் நிலை இவ்வாறு இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் எப்படியும் கவனித்துக் கொள்வார்கள். மரணம் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் முதுமை அடைந்து மரணிப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.

 இந்த நிலையில் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தால் கணவனை விட மனைவி சீக்கிரம் மரணிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் தள்ளாத வயதில் அவன் தனித்து விடப்படும் நிலை ஏற்படும். ஆனால் தன்னை விட குறைந்த வயதுப் பெண்ணைத் திருமணம் செய்தால் மனைவிக்கு முன்னர் கணவன் மரணிக்கும் வாய்ப்புகள் அதிகம். மனைவியின் கவனிப்பு இருக்கும் போது மரணிக்கும் வாய்ப்பு இருக்கும். 

இது போன்ற சாதக பாதகங்களையும் கவனத்தில் கொண்டு முடிவு செய்வது நல்லது

வரதட்சணை கேட்பதால் திருமணம் செய்யாமல் இருக்கலாமா

கேள்வி: ஒரு இஸ்லாமிய பெண் வரதட்சணை வாங்கும் ஒரு ஆணை திருமணம் செய்ய மாட்டேன் என்று நிராகரிக்கலாமா? நமது சமுதாயத்தில் வரதட்சணை இல்லாமல் திருமணம் இல்லை எனும் நிலைமை இருக்கும்போது அப்படி செய்தால் அந்த பெண்ணின் நிலை என்ன?


 பதில்: வரதட்சணைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. பொதுவாக மார்க்கத்தில் அனுமதி இல்லாத வழிகளில் எதனையும் அடையக் கூடாது என்பது திருமணத்துக்கும் பொருந்தக் கூடியதாகும். வரதட்சணை கொடுத்துத் தான் திருமணம் நடக்கும் என்றால் வரதட்சணை கொடுக்காமல் திருமணம் செய்வதற்குத் தான் பெண்களும் பெண்ணைப் பெற்றவர்களும் முயல வேண்டும்.

 வரதட்சணை இல்லாத மணமகனைத் தான் தேட வேண்டும். இவ்வாறு தேடிப்பார்த்தும் வரதட்சணை இல்லாமல் மணமகன் கிடைப்பதாகத் தெரியவில்லை என்று தெரியும் போது, ஆண்டுகள் பல கடந்தாலும் வரதட்சணை இல்லாமல் வாழ்க்கைத் துணை அமையாது என்ற நிலை ஏற்படும் போது என்ன செய்வது? ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தக்க சமயத்தில் வாழ்க்கைத் துணை அமையாமல் போனால் அதன் காரணமாக விபச்சாரத்தில் விழுந்து விடாமல் தன்னால் முழுக் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியும் என்று ஒரு பெண் நம்பினால் அவள் அவ்வாறு இருந்து கொள்ளலாம். காலம் இருக்கும் நிலையில் எங்கு பார்த்தாலும் விபச்சாரத்துக்கு தூண்டக் கூடிய காட்சிகள் மலிந்துள்ள போது, ஒரு பெண்ணால் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டால், திருமணம் செய்யாவிட்டால் வழி தவற நேரும் என்று அவள் அஞ்சினால் அப்போது விபச்சாரத்தில் சென்று விடக் கூடாது என்பதற்காக வரதட்சணை கேட்பவனை மணந்து கொண்டால் கருணையுள்ள அல்லாஹ் அதை மன்னிப்பவனாக இருக்கிறான். 

அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப் பட்டவர் தவிர. (அல்குர்ஆன் 16:106) இறை நிராகரிப்பு என்பது தான் அல்லாஹ்விடத்தில் மன்னிக்க முடியாத பாவமாகும். ஆனால் அதற்கே நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அல்லாஹ் இந்த வசனத்தில் விதி விலக்கு வழங்குகின்றான். பன்றி இறைச்சி மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட உணவு. அதையும் நெருக்கடி,நிர்ப்பந்தத்தின் போது சாப்பிட்டால் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான் என்பதைக் கீழ்க்கண்ட வசனம் விளக்குகின்றது.

 தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும்,வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:173) மூன்று நாட்கள் உணவு கிடைக்கா விட்டால் கூட மார்க்கத்தில் தடுக்கப்பட்டவைகளை செய்யலாம் என்று மார்க்கம் அனுமதி அளித்துள்ளது. 

எனவே பொதுவாக இது போன்ற மனமகனை பெண்கள் மணக்கக் கூடாது என்றாலும் அதைத் தவிர வேறு வழி இல்லை என்றால் அப்போது வரதட்சணை கேட்பவனை மண்ந்து கொண்டால் அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால் வரதட்சணை கேட்காத மணமகணைத் தேடுவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்தும் அதற்கேற்ற மணமகன் கிடைக்காத போது தான் அது நிர்பந்தமாகும். அவ்வாறு இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே எவனாக இருந்தாலும் சரி என்று தலையை நீட்டினால் அவர்கள் நிர்பந்த்த்துக்கு உள்ளானவர்களாக மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்

                                                                            onlinepj

அக்கா மகளை மணந்திருந்தால்

அக்கா மகளை மணந்திருந்தால் எனக்குத் தெரிந்த ஒருவர் அறியாமைக் காலத்தில் அக்கா மகளை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் அவர் என்ன செய்வது? 


உடன் பிறந்த சகோதரியின் மகளை மணமுடிப்பதை அல்லாஹ் தடை செய்துள்ளான். حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ (23)4 உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். 

அல்குர்ஆன் (4 : 23) சகோதாரியின் மகளைத் திருமணம் செய்யக் கூடாது என்பதை ஒருவர் அறியாமல் இருக்க முடியாது. முஸ்லிம்களில் எந்தக் கொள்கை உடையவராக இருந்தாலும் அவர்கள் இது போன்ற திருமணத்தை செய்து வைக்க மாட்டார்கள். அவர் அறிந்து கொண்டே தான் இதைச் செய்திருக்க வேண்டும். இப்போது இறையச்சம் ஏற்பட்டு அவர் திருந்த எண்ணியிருக்கலாம். எனவே அவர் அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட இந்தக் காரியத்தைச் செய்ததற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த வாழ்க்கையை மறுபடியும் அவர் தொடரக்கூடாது. இதற்கு முன்பு அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தாலும் சட்டம் தெளிவான பிறகு அந்த வாழ்வைத் தொடராமல் இருவரும் பிரிந்துவிட வேண்டும்.

 இது போன்ற பிரச்சனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நபித்தோழருக்கு ஏற்பட்டது. கணவன் மனைவியாக வாழ்ந்த அவ்விருவரும் பிரிந்துவிட வேண்டும் என்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

 88حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ أَنَّهُ تَزَوَّجَ ابْنَةً لِأَبِي إِهَابِ بْنِ عَزِيزٍ فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ إِنِّي قَدْ أَرْضَعْتُ عُقْبَةَ وَالَّتِي تَزَوَّجَ فَقَالَ لَهَا عُقْبَةُ مَا أَعْلَمُ أَنَّكِ أَرْضَعْتِنِي وَلَا أَخْبَرْتِنِي فَرَكِبَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ فَسَأَلَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ وَقَدْ قِيلَ فَفَارَقَهَا عُقْبَةُ وَنَكَحَتْ زَوْجًا غَيْرَهُ رواه البخاري 

உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) கூறுகிறார்கள் : நான் அபூஇஹாப் பின் அஸீஸ் என்பவரின் மகளை மணந்துகொண்டேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து "நான், உக்பாவுக்கும் நீ மணந்துகொண்டுள்ள பெண்ணுக்கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டியிருக்கிறேன்' (இந்த வகையில் நீங்கள் இருவரும் பால்குடிச் சகோதரரர்கள் ஆவீர்கள்) என்று கூறினார். நான் "நீங்கள் எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணமுடித்துக் கொண்டபோது) நீங்கள் எனக்கு (இதைத்) தெரிவிக்கவில்லையே!'' என்று கேட்டேன்.  ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து) நான் மதீனாவிலிருந்த நபி (ஸல்) அவர்களை நோக்கிப் பயணம் செய்து, அவர்களிடம் (இது குறித்து) வினவினேன்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நீயும் உம் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால்குடித்ததாகச்) சொல் லப்பட்டுப் போன பிறகு எப்படி (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)?'' என்று கூறினார்கள். 

ஆகவே நான் அவளை விட்டுப் பிரிந்துவிட்டேன். அவள் பெண்ணும் வேறொரு கணவனை மணந்துகொண்டாள். நூல் : புகாரி (88) இவர்கள் பிரிந்துவிட்டாலும் குழந்தைக்கு இவர்களே தாயும் தந்தையுமாவார்கள். இவ்விருவரில் குழந்தை யாரிடத்தில் இருக்க விரும்புகின்றதோ அவரிடத்தில் சேர்க்கப்படும்.

விந்து வெளியாகாமல் உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையா?

'ஒருவர் (தம் மனைவியுடன்) உடலுறவு கொண்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவரின் சட்டம் என்ன? என்று நான் உஸ்மான்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, 'அவர் தம் ஆண் குறியைக் கழுவிவிட்டு, தொழுகைக்கு செய்வது போன்று உளூச் செய்ய வேண்டும். இதை நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன்' என உஸ்மான்(ரலி) கூறினார். மேலும் இது பற்றி அலி, ஸுபைர், தல்ஹா, உபை இப்னு கஅப் (ரலி) ஆகியோரிடம் நான் கேட்டதற்கு, அவர்களும் இவ்வாறே கூறினார்கள்" ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார். மேற்கண்ட ஹதீஸின் படி செயல்படலாமா?


        கணவன் மனைவி இருவரும் உறவில் ஈடுபட்டு விந்து வெளியாகவில்லையானால் உளுச் செய்தாலே போதுமானது; குளிக்க தேவையில்லை என்பது ஆரம்பத்தில் நடைமுறையில் இருந்த சட்டமாகும்.. அதைத் தான் உஸ்மான் (ரலி) உபை இப்னு கஅப் (ரலி) போன்றவா்கள் கூறியிருக்கிறார்கள். 

 இந்தச் சட்டம் பின்னர் மாற்றப்பட்டு விட்டது. தம்பதியர் இருவரும் உறவில் ஈடுபட்டு முயற்சி செய்து விட்டாலே விந்து வெளியானாலும் வெளியாகாவிட்டாலும் குளிப்பது அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடக் கூறிவிட்டார்கள் . நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து, பின்னர் அவள் மீது தனது வலிமையைக் காட்டினாலே அவர்மீது குளியல் கடமையாகிவிடும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 578 எனவே இல்லறத்தில் ஈடுபட்டு விந்து வெளியானாலும் விந்து வெளியாகாவிட்டாலும் இருவர் மீதும் குளிப்பது அவசியமாகும். சட்டம் மாற்றப்பட்ட விவரம் தெரியாத காரணத்தால் சில நபித்தோழர்கள் முந்தைய சட்டங்களையே சொல்லியிருக்கிறார்கள்

                                                                                          onlinepj

Wednesday, 29 May 2013

கணவன் தன்னுடைய மனைவியிடம் பால் அருந்துவதின் சட்டம் என்ன ?




கணவன் மனைவியரிடையே நடக்கும் இல்லறத்தில் குறிப்பிட்ட சில காரியங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. மனைவியின் பின் துவாரத்தின் வழியாக புணருவதையும் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அவளுடன் உடலுறவு கொள்வதை மட்டுமே மார்க்கம் தடை செய்கின்றது. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். ''அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகிவிட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! அல்குர்ஆன் (2 : 222) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்ணிடத்தில் உடலுறவு கொள்பவன் அல்லது மனைவியின் பின் துவாரத்தில் புணருபவன் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை உண்மை என்று நம்புபவன் முஹம்மதின் மீது அல்லாஹ் அருளிய(வேதத்)தை மறுத்து விட்டவனாவான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : அஹ்மத்(9779) எனவே தடை செய்யப்பட்ட இந்த இரண்டைத் தவிர்த்து மற்ற அனைத்து காரியங்களும் அனுமதிக்கப்பட்டவையே. பின்வரும் வசனம் இந்த அனுமதியைத் தருகின்றது. உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்! அல்குர்ஆன் (2 : 223) மனைவியிடம் கணவன் பால் குடிப்பதால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும் என்பது அறியாமை ஆகும். ஏனெனில் தாய் மகன் என்ற உறவை ஏற்படுத்தும் பாலூட்டுதல் என்பது இரண்டு வயதிற்குற்பட்ட நிலையில் தான். இந்த நிலையைத் தாண்டி பாலருந்தினால் தாய் மகன் என்ற உறவு ஏற்படாது. அதாவது பாலை மட்டுமே உணவாகக் கொண்டு பாலருந்தும் பருவத்தில் அருந்தினால் மட்டுமே பால்குடி உறவு ஏற்படும். இதைப் பின்வரும் வசனங்கள் எடுத்துரைக்கின்றன. பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். திருக்குர்ஆன்2:233 மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. திருக்குர்ஆன்31:14 ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இது தெளிவாகவும் கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் வீட்டுக்கு வந்த போது என் அருகில் ஒரு ஆண் இருந்தார். இவர் யார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அதற்கு நான் இவர் எனது பால் குடி சகோதரர் என்று கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆயிஷாவே, உங்கள் சகோதரர் யார் என்பதில் கவனமாக இருங்கள். பால்குடி உறவு என்பது பசியினால் தான் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்-புகாரி5102 ஆனால் தாம்பத்தியம் சிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியிடம் பாலருந்துவது தடுக்கப்படாவிட்டாலும் மனைவிக்கு பால் சுரப்பது அவளது குழந்தைக்காகவே. எனவே குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் இந்த அனுமதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் கணவன் மனைவியரியடையே நடக்கும் அந்தரங்கமான விஷயங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு விவரிப்பது நாகரீகமான செயல் அல்ல என்பதால் உங்கள் மனைவிமார்கள் உங்கள் விளைநிலங்கள் என்று பொதுவாக அல்லாஹ் கூறி விட்டான். அதில் எல்லாமே அடங்கும். இதிலிருந்து இல்லறம் தொடர்பான ஏனைய சட்டங்களையும் அறிந்து கொள்ளலாம்